- பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
இன்று காலையில் வானம் இருள் சூழ்ந்து இருந்தது. நாகர்கோவிலில் காலையில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது. அதிகாலையிலேயே பெய்த சாரல் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினார்கள்.
பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் நீடித்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.
பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.26 அடியாக உள்ளது. அணைக்கு 873 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 792 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் 352 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.43 அடியாக உள்ளது. அணைக்கு 232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.