தமிழ்நாடு

மேடவாக்கம் அருகே பொன்மார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சீரமைப்பு

Published On 2023-05-12 07:04 GMT   |   Update On 2023-05-12 07:04 GMT
  • தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
  • பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை மேடவாக்கம் அருகே மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலையில் உள்ள பொன்மார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத தியாக வினோத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கோவிலை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன.

பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த கோவில் 60 அடி நீளம், 35 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. கோவில் விமானம் உள்ள பகுதி மட்டும் 22 அடி நீளம், 14 அடி அகலத்தில் உள்ளது. ஐந்தரை அடியில் பெருமாள் சிலையும், ஐந்தேகால் அடி யில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலின் எதிரே கருடன் சன்னதி உள்ளது. கோவில் விமானத்தில் பெருமாளின் அவதாரங்கள் உள்பட 108 சிலைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த கோவிலின் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்து மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பொன்மார் கிராமம் ஒரு காலத்தில் தியாக வினோதநல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பெயரிலேயே இந்த ஊர் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஊரில் உள்ள ஒருவர் தனது கனவில் கோவில் தோன்றியதாக கூறினார். இதையடுத்து இந்த கோவில் பற்றிய தகவல்களை ஊர் மக்கள் திரட்டினர். இந்த கோவிலில் சிலைகள் எதுவும் இல்லை. இங்குள்ள கருடன் உருவத்தை வைத்து இது பெருமாள் கோவிலாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அங்கு கிடைத்த வரலாற்று குறிப்புகளையும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூறிய தகவல்களையும் வைத்து தியாக வினோத பெருமாள் கோவில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் பெருமாள் பிரயோக சக்கரத்துடன் அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக பெருமாள் கோவிலில் இருக்கும் சக்கரத்தை போல் இல்லாமல் இது நேராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News