கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது- பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு அறிவிப்பு
- பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கிறார்.
சென்னை:
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல மொழிப் பாடல்களைப் பாடியவரும், 'தென்னிந்தியாவின் இசைக்குயில்' என்றும், 'மெல்லிசை அரசி' என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்ட வருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்.