தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா?
- தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.
- 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி விட்டார்.
சென்னை:
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
அந்த வகையில் பிறக்கப்போகும் புத்தாண்டின் (2024-ம் ஆண்டு) முதல் சட்டசபைக் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தொடரின்போது அரசு தயாரித்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முறையாக படிக்கவில்லை. அதற்கு பதிலாக சில வரிகளை தவிர்த்துவிட்டு சொந்தமாக சில வாசகங்களை சேர்த்து படித்தார்.
இதனால் கவர்னர் பேசி முடித்ததும் சபாநாயகர் அப்பாவு அதை தமிழாக்கம் செய்து வாசித்தார். அப்போது எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை கவர்னர் முறையாக படிக்கவில்லை என்று சட்டசபையில் குற்றம்சாட்டினார்.
அவர் பேசுகையில் தமிழக அரசு தயாரித்த உரையை கவர்னர் முறையாக படிக்கவில்லை. எனவே கவர்னர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசிக்கொண்டு இருக்கும்போது கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.
இதன் பிறகு கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து விட்டது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வந்தார்.
இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் கவர்னர் அரசுடன் ஒத்துப்போக வேண்டும். இது சம்பந்தமாக முதலமைச்சருடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த சூழலில் 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அதை அனுப்பி விட்டார். அதன் பிறகு முதலமைச்சருடன் பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக தெரிவித்து விட்டார்.
இதற்கிடையே கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியும் பயணம் செய்தார். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
விமானத்தில் வெவ்வேறு இடத்தில் அமர்ந்து பயணம் செய்தனர். விமானத்தில் இருந்து இறங்கும் போதும் பேசவில்லை.
எனவே கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சருக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் தமிழக சட்டசபையின் 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்திற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.