தமிழ்நாடு

பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.18 லட்சம் வரவு

Published On 2023-10-01 00:00 GMT   |   Update On 2023-10-01 00:00 GMT
  • வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
  • கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 101 வரவு வைக்கப்பட்டு அந்த தொகை 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பண்டித விஜயலட்சுமி (வயது 55). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கான முதியோர் ஓய்வூதியம் அந்த வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 மாதமாக முதியோர் ஓய்வூதியம் வராமல் இருந்தது. இதனால் அந்த வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.

அப்போது கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, இருப்புத்தொகை ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191 இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191- ஐ 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் வங்கி கையிருப்பு பூஜ்ஜியம் என்று ஆனது.

இது குறித்து விஜயலட்சுமி வங்கி தரப்பில் விசாரித்தபோது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, வேறு ஒருவரின் வங்கி கணக்கு தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News