தமிழ்நாடு

அம்மாபேட்டை அருகே கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் பலி

Published On 2022-09-20 10:26 IST   |   Update On 2022-09-20 10:26:00 IST
  • அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி.
  • சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.

இதில் அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்று விட்டான். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்.

அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடி கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்த வர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சிறுவனின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது.

மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பதும், இறுதியாக 7அடி ஆழமுள்ள குழி அருகே அமர்ந்து கொண்டிருப்பதும், அதில் தவறி விழுந்ததும் பதிவாகி இருந்தது.

அந்த குழியில் 4 அடி ஆழம் தண்ணீர் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்ததும் தெரிய வந்தது.

சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News