தென்மண்டல தி.மு.க.வினருக்கு ராமநாதபுரத்தில் பயிற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்குகிறார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முன் கூட்டியே தொடங்கி விட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சியான தி.மு.க.வும் இந்த தேர்தலை கடுமையான சவால்களுடன் சந்திக்க தயாராகி வருகிறது. அதற்கான வியூகங்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முக்கிய பங்காற்றி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.
இந்த தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச் சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்திட முடிவு செய்து 5 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல் கூட்டம் டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியான 17 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி இன்று ராமநாதபுரத்தில் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றி ஆலோசனைகள் வழங்கவும், நாளை நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் பங்கேற்கவும் 3 நாள் பயணமாக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க.வினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதல் நிகழ்ச்சியாக மதுரை முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பழம்பெரும் பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்துவைத்தார்.
பின்னர் தனியார் ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை மதுரையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமநாதபுரம் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கட்சியினர் திரண்டு அவரை வரவேற்றனர்.
மாவட்ட எல்லையில் இருந்து ராமநாதபுரம் வரை 54 இடங்களில் சிறிய அளவிலான மேடை அமைத்து ஆடல், பாடல், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறும் ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினம் சாலையில் அமைந்துள்ள பேராவூருக்கு அவர் வருகை தந்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி மேற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இந்த பயிற்சி பாசறையில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
இந்த கூட்டம் காலை முதலே தொடங்கி நடைபெறுகிறது. மாலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி நிறைவுரையாற்றுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்காக பேராவூரில் கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் பிரமாண்ட பந்தல், மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவருக்கும் காலை, மதியம் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் பங்கேற்பதற்காக காலை முதல் 19 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், கட்சியின் முன்னோடி நிர்வாகிகள் ராமநாதபுரத்தில் குவிந்துள்ளனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரிய கருப்பன், பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு ராமேசுவரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு அங்கு தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கலோனியர் பங்களாவில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இலங்கை கடற்படையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மீன்பிடி தடை காலத்தில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் மதுரை வரும் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.