ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் அமைப்பு ஆதரவு
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது.
- இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
சேலம்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர். அப்போது திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.
இதேபோல் மனித உரிமைகள் கழகமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரத்திலும் ஈடுபடுவோம் என்றார்.