தமிழ்நாடு

நாடு முழுவதும் பா.ஜனதா அரசை மக்கள் தூக்கி எறியும் காலம் வரும்: கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2024-02-17 04:20 GMT   |   Update On 2024-02-17 04:20 GMT
  • ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
  • மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

நெல்லை:

'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.

ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.

மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News