'வீழ்த்தப்படுவதையும், வீழ்வதையும் பார்ப்போம்': மு.க.ஸ்டாலின் ஹோம் ஒர்க் செய்து பேச வேண்டும்- குஷ்பு
- இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும்.
- 2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.
சென்னை:
வருகிற தேர்தலில் பா.ஜனதா ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியா வளர்ச்சி அடையவில்லை. ஊழல் மலிந்து விட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊழல் என்று பேசியிருப்பதை பார்த்து இந்தியாவே சிரிக்குமே. ஊழல் பற்றி அவர் பேசலாமா? ஊழல் கட்சி என்று நாடு முழுவதும் பெயர் பெற்ற கட்சி தி.மு.க.
ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தவர்களே அவர்கள்தான். மக்கள் மறந்து விடுவார்களா?
இப்போதும் ஊழல் செய்ததாக ஒரு அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயில் உறுதி என்றார்.
இப்போது அவர் ஜெயிலுக்கு போனதும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு பா.ஜனதா பழி வாங்குகிறது என்கிறார். தோண்ட தோண்ட ஊழல் வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் மோடியை வீழ்த்துவோம் என்று இவர்கள் பேசுவதும் முன்பைவிட அதிக தொகுதிகளை பெற்று மோடி வெற்றி பெறுவதையும் நாடு பார்த்து வருகிறது.
அந்த வகையில் இந்த தேர்தலிலும் அமோக வெற்றியை மக்கள் கொடுப்பார்கள். வீழ்த்தப்படுவதும், வீழப்போவதும் யார் என்பது அப்போது தெரியும்.
நாடு முன்னேறவில்லை என்று சொல்வதற்கு முன்பு ஒரு முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து யோசித்து பேச வேண்டாமா? உலக அளவில் இந்தியாவின் பெயர் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? உலகில் தலைசிறந்த தலைவராக மோடி உயர்ந்து நிற்கிறார்.
காங்கிரசுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து பெண்களுக்காக செய்தது என்ன? சுயமரியாதை, சொத்துரிமை என்று உடனே பழங்கதையை பேசுவார்கள். பெண்களின் அடிப்படை பிரச்சனையை உணர்ந்து நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் நிறைவேற்ற முடியாத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒரே நாளில் நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.
இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும். இதற்கு முன்பு இந்தியாவை தெரியவில்லையா?
2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். முதலமைச்சர் எதையும் பேசுவதற்கு முன்பு 'ஹோம் ஒர்க்' செய்து பேச வேண்டும். யாரும் தயார் செய்து கொடுக்கும் உரையை பேசினால் இப்படித்தான் தப்பு தப்பாக பேசி மக்கள் சிரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.