குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: பலியான 2 பேருக்கும் கிருமி பாதிப்பு இல்லை- நுண்ணுயிர் பரிசோதனையில் தகவல்
- திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது.
- தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பல்லாவரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர் மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் பகுதியில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அந்த தண்ணீரை குடித்ததால்தான் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகிய 2 பேர் பலியானதாகவும் கூறப்பட்டது.
மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர்களது சாவுக்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் உயிரிழந்த 2 பேருக்கும் கிருமி பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்ட ரசாயன பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அந்த முடிவுகள் வந்த பிறகு இவர்களது சாவுக்கான காரணம் தெரிய வரும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் ஈ கோலி பாக்டீரியாக்கள் அதில் இல்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது குடிநீர் பகிர்மான குழாய்கள் முழுவதும் குளோரின் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 12-ந் தேதி குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகு குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் மீண்டும் குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும், அதுவரை லாரிகள் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் தெரிவித்தார்.
இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தனியார் ஆய்வுகள் முடிவுகளை வெளியிட்டு, பல்லாவரத்தில் வினியோகம் செய்த குடிநீரில் ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகளவு இருந்ததாக தெரிவித்து குற்றம்சாட்டி இருந்தார்.
இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "குடிநீரில் எந்த பாதிப்பும் இல்லை. அந்த பகுதியில் ரசாயன குடோன்கள் அதிக அளவு இருப்பதால் அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" தெரிவித்தனர்.