- பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி சிறையில் கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கஞ்சா மற்றும் செல்போன் சிறைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஷ்வத்தாமன் உள்பட 23 பேர் மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 38 கைதிகள் புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறைத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதையொட்டி பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.