தமிழ்நாடு

எஸ்.ஏ.பாஷா

அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் இன்று மாலை அடக்கம்: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2024-12-17 04:20 GMT   |   Update On 2024-12-17 04:20 GMT
  • கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார்.
  • பாஷாவின் உடல் அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

கோவை:

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ்கார்டனை சேர்ந்த அல்-உம்மா இயக்க தலைவரான எஸ்.ஏ.பாஷா உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் இருந்த எஸ்.ஏ.பாஷாவுக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். நேற்றுமுன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இன்று மாலை கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் ஹைதர் அலி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் எஸ்.ஏ.பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.பாஷாவின் வீடு, அந்த பகுதி, ஊர்வலம் செல்லும் பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News