ரூ.6,000 நிவாரணம் - முன்கூட்டியே 'டோக்கன்' விநியோகம்...
- மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதில் சென்னை மாநகரம்-புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஏராளமானோர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் சேதம் அடைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் உத்தரவிட்டார்.
இது மட்டுமின்றி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தவிர கால்நடைகள், பயிர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் டோக்கன் வினியோகிக்க அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகளில் பணம் வினியோகித்து விடலாம் என்று அரசு கருதுவதால் நாளை முதல் டோக்கன் வினியோகிக்க அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அனைத்து பகுதிகளுக்கும் பெரும்புதூர் தாலுகாவில் மேவலூர் குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கும் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்குள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கியதும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக இருப்பதால் இங்குள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்காது.
குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வசதி படைத்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.
வருமான வரி செலுத்துபவர்கள், அரசு அதிகாரிகளில் ஏ.பி. வகையான அதிகாரிகள், மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவில் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.