- கிராமங்கள் மற்றும் அதிகப்படியான விவசாயிகள் மிகுந்த நாடு இந்தியா
- அறக்கட்டளையின் நோக்கம் இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அநீதிக்கு எதிராக கல்வி கற்பது மற்றும் அவர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது
இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்கிறது.
மற்றவர்களை போன்று ஷிஃப்ட் ஃபாலோ செய்து, பஸ் பிடித்து, ரெயில் பிடித்து, பணிக்கு சென்று, மாத சம்பளத்தில் வாழ்பவர்கள் இல்லை விவசாயிகள். 24 மணிநேரமும் உழைக்கக் கூடியவர்கள்.
எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் இவர்களை என்றும் நினைவு கூர்வது அவசியம். ஆயினும் அவர்களுக்கென்ற தனி விசேஷ நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றாடம் உழைக்கும் விவசாயிகளை பாராட்ட இந்நாளை தேர்ந்தெடுத்திருப்பதற்கான காரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமரான சரண் சிங் தான். அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சரண் சிங் (28 ஜூலை 1979 முதல் 14 ஜனவரி 1980) வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த அவர், கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தார். இந்தியாவின் விவசாயத்தை மேம்படுத்த அவர் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டார். 1952 இல் விவசாய அமைச்சராகப் பணியாற்றியபோது, ஜமீன்தாரி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு உத்தர பிரதேசத்தில் தலைமை தாங்கினார்.
23 டிசம்பர் 1978 அன்று அரசியல் சாராத, இலாப நோக்கற்ற அமைப்பான கிசான் அறக்கட்டளையின் நிறுவனர் சரண் சிங். நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவரும் இவர்தான். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டில், சரண் சிங்கின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் நலனுக்கான பங்களிப்பை அவரது பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினம் என்று கொண்டாடுவதன் மூலம் அங்கீகரிக்க முடிவு செய்தார்கள். அப்போதிலிருந்து, டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயம் தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிகள், கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.
இந்தியா கிராமங்கள் மற்றும் அதிகப்படியான விவசாயிகள் மிகுந்த நாடு என்று அறியப்படுகிறது. மேலும், கிட்டத்தட்ட 50 சதவீதம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர் மற்றும் நாட்டின் பெரும்பான்மையான கிராமப்புற மக்களாக உள்ளனர். விவசாயிகளின் பங்கு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் இயக்கங்களை ஏற்பாடு செய்து, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு இன்றைய நவீனமான விவசாய அறிவை வழங்குவதற்காகவும் அவர்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான முறைகளைகளையும் கொண்டுவருவதாக இந்நாள் உள்ளது.