தமிழகத்தில் 543 பேருக்கு பணி நியமன ஆணைகள்: சென்னையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்
- டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை:
இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று 9வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தபால் துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, சுகாதாரத்துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது,
இந்த வேலை வாய்ப்பு தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வு அடிப்படையிலானது. எனவே தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்கள் இங்கு அதிக அளவில் வருவதற்கு காரணம் அவர்கள் அதிக அளவில் போட்டி தேர்வை சந்திக்கிறார்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் பணி பெறுபவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியானால் தான் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும் என்றார்.
அதைத்தொடர்ந்து பணி நியமன ஆணை பெற வந்தவர்களிடம் அவர்களுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.