செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு
- பூஞ்சேரியில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
- மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 44-வது "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர்.
இதையொட்டி பூஞ்சேரியில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக ஒரு அரங்கம், 8 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் அரங்கம், பாதுகாப்பு, கார் நிறுத்தம், சாலை வசதி, போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.
புதிய அரங்கம் அமைக்கும் பணிகள் இன்னும் முடியாததால், காவல்துறை கட்டுப்பாட்டில் போட்டி நடைபெறும் "போர் பாயின்ட்ஸ்" அரங்கத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி விரைவாக பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாட்டு துறை முதன்மை செயலர் அபூர்வா, போட்டி ஏற்பாட்டு சிறப்பு அலுவலர் சங்கர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், கலெக்டர் ராகுல்நாத், டி.ஐ.ஜி., சத்தியபிரியா, மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் பணிகளை வேகமாக முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவர் போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் வளாகத்தை பார்வையிட உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.