நெல்லை, தென்காசியில் தொடர் மழை- அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 21 அடி உயர்வு
- சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 21 அடி உயர்ந்துள்ளது.
- மணிமுத்தாறு அணைநீர்மட்டம் இன்று 70.35 அடியாக உள்ளது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றும் அணைப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 85.2, மில்லிமீட்டர், குண்டாரில் 56.6 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதேபோல் தென்காசி, ஆய்க்குடி, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், சங்கரன்கோவில் மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளான சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு, கொடுமுடியாறு, நம்பியாறு, அம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 89 அடியாக இருந்தது.
நேற்று 2 அடி உயர்ந்து 91 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அதிகரித்து 93.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,602.20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 517.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 15-ந் தேதி 93 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக கடந்த 3 நாட்களாக தலா 6 அடி உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 அதிகரித்து 111.61 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 21 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணைநீர்மட்டம் இன்று 70.35 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணையின் நீர்மட்டம் இன்று 83 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி நீர்மட்டம் இன்று 81 அடியாக உள்ளது.
132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 63 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக இன்று ஒரே நாளில் 21 அடி உயர்ந்து 84 அடியாக உள்ளது.
72.10 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் இன்று 2அடி உயர்ந்து 59.77 அடியாக உள்ளது. இதேபோல் குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அனைத்து அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். குற்றாலம் நோக்கி வரும் ஐய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.