தமிழ்நாடு

ராமர் கோவில் திறப்பு- அயோத்திக்கு வர சொல்லி 2 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு

Published On 2024-01-01 11:38 GMT   |   Update On 2024-01-01 11:38 GMT
  • பஜ்ரங் தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஈடுபட்டுள்ளார்கள்.
  • பணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றனர்.

சென்னை:

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோவிலில் வருகிற 22-ந் தேதி (திங்கள்) சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நாடு முழுவதும் மக்கள் மனப்பூர்வமாக பங்கெடுப்பார்கள்.

முதல் நாளில்தான் பங்கெடுக்க வேண்டும் என்பதல்ல. ராமர் கோவில் காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். மக்கள் சவுகரியப்பட்ட நாட்களில் சென்று ராமரை தரிசியுங்கள். 22-ந் தேதி வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை நேரில் அழைக்கும் திட்டத்தை இந்து அமைப்புகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி குடும்பங்களை நேரில் அழைக்கிறார்கள். இதற்காக அயோத்தியில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட அட்சதை ராமர் படம், நிகழ்ச்சி பற்றிய துண்டு பிரசுரம் வந்துள்ளது.

இவற்றை வீடு வீடாக கொடுத்து மக்களை அழைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜனதா, இந்து முன்னணி, அகில பாரத வித்யார்த்தி பரிசத், பஜ்ரங் தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஈடுபட்டுள்ளார்கள்.

வீடுகளுக்கு செல்லும் போது ராமர் கோவில் திறக்கப்படுவது பற்றி கூறி அட்சதை, ராமர் படம், நிகழ்ச்சி விபர பிரசுரங்களையும் வழங்கி வருகிறார்கள்.

இந்த பணியில் ஈடுபட்டு உள்ள சேவகர்களிடம் கேட்ட போது, இந்த புனித நிகழ்ச்சியை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ராமர் எல்லோருக்கும் சொந்தம். இதில் பிரபலங்கள், முக்கிய பிரபலங்கள், சாதி, மதம் என்று எதுவும் பார்ப்பதில்லை. எல்லா வீடுகளுக்கும் நேரில் சென்று அழைக்கிறோம். இந்த பணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றனர்.

Tags:    

Similar News