ஆர்.கே.நகர் தேர்தலில் டோக்கன் கொடுத்து வெற்றி பெறவில்லை- தினகரன்
- 2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர்.
- நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நந்த கோபாலன் கோவில் சித்திரை திருவிழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என மக்கள் கூறுகின்றனர். நான் எந்த வித கருத்து கணிப்பும் நடத்தவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011ம் ஆண்டு நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.
2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கோஷ்டியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப் பார்த்து டோக்கன் கொடுத்த விவகாரம் தெரியவரவே அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து நான் வெற்றிபெற வில்லை.
தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் கொடுத்தது யார்? என்று உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.வுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனால்தான் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. என் கைக்கு வரும் என்று பேசினார். அவர் படித்தவர். 3 ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்.
நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பிய போது, கோவில் விழாவுக்கு வந்துள்ளேன். எனவே அவரைப்பற்றி பேசி டென்சனாக்கி விடாதீர்கள் என கூறினார்.
விழாவுக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தினகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.