பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
- சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் களத்தில் உள்ளதால் தண்ணீர் மட்டும் குடித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் இன்று வரை 204 பேர் சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றனர்.
அதில் 182 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 22 பேருக்கு போராட்ட களத்திலேயே மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்."
"உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்," என்று தெரிவித்து உள்ளனர்.