குமரியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை
- மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டி தீர்த்தது. காலையிலும் கனமழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
செட்டிகுளம் சவேரியார் ஆலயம், வடசேரி, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலை 9 மணி வரை இருள் சூழ்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரிய விட்டவாறு சென்றனர். தொடர் மழையின் காரணமாக பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.
இதனால் நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடியது. நாகர்கோவில் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இடலாக்குடி பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் கிடக்கிறது. இதனால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சாலையின் நடுவே கிடக்கும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் அந்த பகுதியில் மரம் நடப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். இதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கன்னியாகுமரி பகுதியில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜூகளிலே முடங்கினார்கள். தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து மழை கொட்டியதால் சூரிய உதயத்தையும் பார்க்க முடியவில்லை. அஞ்சுகிராமம், கொட்டாரம், மயிலாடி, இரணியல், குளச்சல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 48.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் இரவு முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.