திருப்பூர் சுடுகாட்டில் சிதறிக்கிடந்த உடல்கள்- நாய்கள் கவ்வி சென்றதால் பரபரப்பு
- சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது.
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் 7 சென்ட் நிலத்தில் பொது சுடுகாடு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 200 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த நிலையில் தற்போது 3000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாரத்தில் 4,5 உடல்கள் இந்த சுடுகாட்டில் புதைக்கப்படும்.
இந்தநிலையில் அங்கு உடல்களை புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடல்களை வெளியே எடுத்து போட்டு புதிய உடலை புதைத்து வருகின்றனர். இதன் காரணமாக சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது. இதனை நாய்கள் கவ்வி இழுத்து செல்கின்றன.
அழுகிய நிலையில் உள்ள உடல்களை நாய்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்து செல்வதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பெண்கள்- குழந்தைகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.