மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்டம்: மேல்முறையீடு செய்த பெண்களுக்கு ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கியது
- 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இதில் தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந்தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னையில் கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தீபாவளி பண்டிகை 12-ந்தேதி வருவதையொட்டி 10-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்றே தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது.
இதனால் மேல்முறையீடு செய்திருந்த குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.