ED ரெய்டு.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்
- தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றுள்ளார்.
- ‘சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்'
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் சென்றுள்ளார்.
முன்னதாக, சென்னையில் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், 'வேலூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து முடிந்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் சிரித்த முகத்துடன், 'சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்' என்று பதிலளித்தார்.