யோகேஷ்குமார்.
துப்பாக்கி சூட்டில் பலியான தேனி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்
- யோகேஷ்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்தது பொதுமக்களை கண்கலங்க வைத்தது.
- யோகேஷ்குமார் மறைவால் தேவாரம், மூணாண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மூணாண்டிபட்டியை சேர்ந்த ஜெயராஜ் மகன் யோகேஷ்குமார் (வயது25). இவர் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.
திருணமாகாத யோகேஷ்குமாருக்கு சங்கீதா (31), சர்மிளா ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 2019ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார்.
உயிரிழந்த யோகேஷ்குமார் உடல் விமானம்மூலம் பஞ்சாபில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மூணாண்டிபட்டிக்கு பகல் 11.30 மணிக்கு வந்தடைந்தது. அங்கு அவரது உடலை உறவினரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் யோகேஷ்குமார் உடலுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
யோகேஷ்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்தது பொதுமக்களை கண்கலங்க வைத்தது. தனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்த்து துப்பாக்கி குண்டுக்கு பலியாகிய ஜெயராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
யோகேஷ்குமார் மறைவால் தேவாரம், மூணாண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.