திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பவுர்ணமி நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவிவட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். மேலும் கட்டண தரிசனம் வழியிலும் பக்தர்கள் 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசனம் வழியில் வந்த பக்தர்கள் போதிய குடிநீர் வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆடி மாத பவுர்ணமி, நாளை 1-ந் தேதி அதிகாலை 3.26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தை யொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பஸ்களும், தெற்கு ரெயில்வே சார்பில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி நாளில், அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.