போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
- போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
- நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியது.
இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் நோட்டீஸ் 'காலக்கெடு' 4-ந்தேதியுடன் முடிவடையும் சூழலில் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.