கிரிவலம் சென்று திரும்பிய கார் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் பலி
- கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது.
- இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
திருக்கோவிலூர்:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி, இந்துஜா, அம்பிகாபதி, அனிதா. இவர்கள் 6 பேரும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இந்த கார் தியாகதுருகம் சாலையில் உள்ள பொன்னியந்தல் அருகே அதிகாலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணம் செய்த வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுனர் திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவை சேர்ந்த ஜலாலுதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.