ஆட்டோ டிரைவர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின- பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை
- உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார்.
- மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், கைமா ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 42). ஆட்டோ டிரைவர்.
இவரது வீட்டில் நேற்று அதிகாலை தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாள், வேல் கம்பு, கத்தி, நிஞ்சா, சுருள் கத்தி, வீல் செயின், கேடயம், கட்டார் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
உமர் ஷெரீப்பின் வீட்டுக்குள் இந்த ஆயுதங்கள் எப்படி வந்தது? ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது ஏன்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார். இவரது பதில், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
மேலும் உமர் செரீப்பின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் புலனாய்வு செய்யப்பட்டது. அதில் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு உமர் செரீப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உமர் ஷெரீப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாருக்குடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் உமர்செரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.