ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகள்: இளைஞர்களின் கனவை எப்படி நனவாக்கும்?- டாக்டர் ராமதாஸ் கேள்வி
- ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
- கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்குதான் அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு கோரி சுமார் 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் கடந்த ஆண்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக 3,339 பேருக்கும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் வாயிலாக 946 பேருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாகவே 2024-ம் ஆண்டில் 15 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.
அரசுத் துறைகளில் ஓராண்டில் 15 ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்கப்படுவது எந்த வகையிலும் போதுமானதல்ல. இதிலும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், 2024-ஆம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இதைவிட குறைந்த அளவில்தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை எந்த வகையிலும் போதுமானவை அல்ல.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 34,384 பேருக்கு மட்டும்தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட பணிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 40,000 என்ற அளவை எட்டக்கூடும். இதுதவிர 33,655 பேருக்கு தற்காலிக அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன. எப்படிப் பார்த்தாகும் தமிழ்நாட்டு இளைஞர்களின் தேவைகளை இவை நிறைவேற்றாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரும் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது.
2024-ம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாயிலாக 10,375 ஆசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் கூட நடப்பாண்டில் நியமிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 6 மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
அதேபோல், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2,768 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டும் அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேர்வு செய்வதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மற்றும் துரோகம் காரணமாக தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
60 லட்சத்திற்கும் கூடுதலான இளைஞர்கள் அரசுப் பணிகளுக்காக காத்திருக்கும் நிலையில், இவ்வளவு பணியிடங்களை காலியாக வைத்திருப்பது பெரும் சமூக அநீதி ஆகும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.