மதுரையில் தடையை மீறி போராட்டம்- குஷ்பு உள்ளிட்ட 314 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மாநில தலைவர் உமாரதி ஆகியோர் கையில் சிலம்புடன் பங்கேற்றனர்.
- தடையை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் கோவில் முன்பாக திரண்டு நின்று தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மாநில தலைவர் உமாரதி ஆகியோர் கையில் சிலம்புடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மதுரை சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவர் ஆட்டுமந்தை திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
இதற்கிடையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு மற்றும் உமாரதி உள்பட 314 பேர் மீது திலகர் திடல் போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.