திட்டமிட்டு உரையை புறக்கணித்தார்: கவர்னரை திரும்ப பெற வேண்டும்- திருமாவளவன்
- கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- கவர்னர் தொடர்ந்து சராசரி அரசியல்வாதி போல் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தலைமை செயலகத்திற்கு வந்தார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரவிக்குமார் எம்.பிக்கு விருது கொடுத்தற்கு நன்றியும் தெரிவித்தார். பின்னர் சட்ட மன்ற வளாகத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்ட மன்றத்தில் கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசியகீதம் என்பது நிகழ்ச்சியின் இறுதியில்தான் பாடப்படும். இதை தெரிந்தும் தெரியாதவர் போல் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கவர்னர் தொடர்ந்து சராசரி அரசியல்வாதி போல் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுக்கு எதிராக தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகளை கிளப்பி வருகிறார். அவரை திரும்ப பெற வேண்டும்.
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆட்சிக்கு தலைவலி கொடுக்கும் கவர்னர்களையே மத்திய அரசு நியமிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை எதிர்க்கட்சியாக செயல்பட முடியாது. தோழமை கட்சியாகத்தான் செயல்படும். அதே நேரம் சுட்டிக்காட்ட வேண்டியதை சுட்டிக்காட்டுவோம். கண்டிக்க வேண்டியதை கண்டிப்போம்.
கூட்டணி என்ற பெயரில் ஆளும் கட்சி எங்களுக்கு எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது எண்ணம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. இதில் அரசியல் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி செய்வதாக முடிந்து விடும். உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டும் விசாரணை நடத்தி வருகிறது. தங்களது புகார்களை அங்கு சென்று முறையிடலாம். அதற்காக தொடர்ந்து அரசை குற்றம் சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.