தமிழ்நாடு

சட்டசபை புறக்கணிப்பு: கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

Published On 2025-01-06 13:57 IST   |   Update On 2025-01-06 13:57:00 IST
  • தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்.
  • தி.மு.க.வுக்கு பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.

சென்னை:

அமைச்சர் சிவசங்கர் இன்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். பாரம்பரியமாக தமிழ்நாடு சட்டசபையில் என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறதோ அதே நிகழ்வு தான் தொடர்ந்து நடைபெறுகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கவர்னர் இருக்கிறார்.

அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுனர் உரையை வாசித்தால் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டிய சூழல் வரும் என்கிற காரணத்தினாலும், இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது என்கிற எண்ணத்தினாலும் தான் அவர் இன்று அப்படி நடந்து கொண்டார்.

59 பக்கத்துக்கு கவர்னர் உரை தமிழக அரசின் சாதனைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை முழுவதுமாக விவரிக்கின்ற வகையில் இருக்கிறது. அதை படிப்பதற்கு தயங்கிக் கொண்டுதான் இன்றைக்கு இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்.

கடந்த முறை தமிழ்நாட்டின் தலைவர்களின் பெயரை சொல்லாமல் மறைத்தவர் இன்றைக்கு ஒட்டு மொத்தமாக கவர்னர் உரையை புறக்கணித்து சென்றுள்ளார். அதற்கு அவர் சொல்ல இருக்கின்ற காரணம் தேசிய கீதம் பாடப்படவில்லை, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று சொல்கிறார்.

ஏதோ தேச பக்திக்கு ஒட்டு மொத்த குத்தகை அவர்தான் என்பது போல் அவர் கூறுகிறார். தேச பக்தியில் தமிழக மக்களை மிஞ்ச முடியாது.

இந்த தேசத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் சுதந்திர போராட்டத் தில் ஈடுபட்டு தங்கள் உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்கள். இவருக்கு முன்பாக இருந்த கவர்னர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தியாகி என்று அழைக்கப்படுகிற நிலையில் கவர்னராக இருந்திருக்கிறார்கள்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த கூற்றை முன்வைக்கவில்லை. ஏதோ இவருக்கு மட்டும்தான் தேச பக்தி வந்தது போல தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்கிறார்.

இதுவரை எத்தனை கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள், எத்தனை முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் இந்த எண்ணம் கிடையாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி விட்டுத்தான் அவை முடிகின்றபோது தேசிய கீதத்தை பாடுவது இயல்பாக இருந்தது.

இன்றைக்கும் அப்படித்தான். இன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி கவர்னர் உரையை தமிழில் அவைத் தலைவர் வாசித்த பிறகு இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அனைவரும் எழுந்து நின்று முறையாக அதற்குரிய மரியாதையை செலுத்தினார்கள்.

எனவே தேசிய கீதத்துக்கு தமிழ்நாடு மக்கள் எந்த வகையிலும் அவமரியாதை செய்பவர்கள் கிடையாது. தமிழ்நாடு சட்டசபை அவமரியாதை செய்வது கிடையாது.

எனவே இந்த தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். இதற்காக கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் முதலமைச்சருக்கோ, தி.மு.க.வுக்கோ பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.

தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் தான். தேசிய கீதம் பாடுகின்ற வரை இருக்காமல் உடனடியாக அவர் வெளிநடப்பு செய்துள்ளார். கடந்த முறையும் இதைத்தான் செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News