தமிழ்நாடு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு

Published On 2025-01-06 13:28 IST   |   Update On 2025-01-06 13:28:00 IST
  • 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.
  • பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சியின்போது 2019-ம் ஆண்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றையும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதனால், 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.

அதன்பின், 9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று, 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 2022ம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன.

இந்நிலையில், 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் கடந்த ஐனவரி 5-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், பதவிக்காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.

குறிப்பாக, சில ஊராட்சி பகுதிகளை, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் இணைப்பதற்கான பணிகள் நடக்க வேண்டியுள்ளன.

இதனால், பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கிராம ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News