தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
- இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
- மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சென்னை:
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.
இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.