சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள்- மறக்க முடியுமா?
- இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.
சுனாமி...
பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல. கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்னர் நம்மில் பலருக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. 2004-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த பெயரை தெரியாதவரே இல்லை.
அந்த அளவுக்கு மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றழித்தது.
26-12-2004 இந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.
வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது.
அன்று நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.
புவியியல் ரீதியில் கூற வேண்டுமென்றால் இந்த நிலநடுக்கம், இந்திய தட்டு மற்றும் பர்மா தட்டு இடையே நடந்தது. இந்த கொடூர நிலநடுக்கத்தால், இந்திய தட்டு பர்மா தட்டின் கீழ் சரிந்து, கடலடியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அப்போது 10 மீட்டர் உயர்ந்த பாறைகளால் கடலின் அடிப்பகுதி திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடிப் பகுதி திடீரென உயர்ந்தும், தாழ்ந்தும் கடல் நீரை அசைத்தது. இந்த மாற்றம், கடல் நீரை வேகமாக நகர்த்தி ராட்சத அலைகளை உருவாக்கியது. இதுவே சுனாமி என அழைக்கப்படும் ஆழிப்பேரலை எழ காரணமாகும்.
கடலில் உருவான சுனாமி பேரலை.
இந்த சுனாமி, கடலின் ஆழத்தில் மணிக்கு 700 கி.மீ வேகத்தில் பயணித்தது. கடற்கரை அருகே வந்தபோது, கடலில் ஆழம் குறைந்து இருந்ததால் அலைகளின் உயரம் அதிகரித்தது. இந்த உயரமான அலைகள் கரையில் மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.
இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மியான்மர், சோமாலியா, தான்சானியா, கென்யா, மலேசியா, வங்காளதேசம் ஆகிய 11 நாடுகளில் இந்த சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தோனேசியா, இந்தியா, மற்றும் இலங்கையில் தான் பேரழிவு மிக அதிகமாக இருந்தது. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். அதில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும், இந்தியாவில் 12 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.
இந்தியாவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழத்தின் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி கடலூர், காரைக்கால் சென்னை ஆகிய கடற்கரைகளில் சுனாமி பேரலைகள் சரியாக 9 மணிக்கு தாக்க தொடங்கின. அதிகபட்சமாக 6 அடி உயர கடல் அலைகளை கண்ட இந்த கடற்கரைகள், முதன் முதலில் 40 அடிக்கு மேலான அலைகளை கண்டது. அப்போது கடலில் மகிழ்ச்சியாக குளித்து கொண்டும், கடற்கரையில் நடந்து சென்று கொண்டும் இருந்த மக்களை, அந்த சுனாமி பேரலை வாரிச் சுருட்டிக் கடலுக்குள் இழுத்து சென்றது.
அதுமட்டுமல்ல பேரலைகள், கடற்கரையைத் தாண்டி சுமார் 2 கி.மீ. தூரம் ஊருக்குள் புகுந்து, அங்கு இருந்த கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அனைத்தையும் அழித்தன. குறிப்பாக கடற்கரை ஒரங்களில் இருந்த மீனவ குடியிருப்புகளை சுனாமி பேரலை, வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனால் அங்கு வசித்த மீனவ குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
சுனாமி பேரலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள், அது தனது கோராதாண்டவத்தை ஆடி முடித்து விட்டது. பகல் 12 மணி வரை சுனாமி அலைகள் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை சூறையாடி விட்டன. அதன்பின் கடல் வழக்கம் போல் அமைதியானது. ஆனால் கடற்கரைகள் எல்லாம் மயான பூமி ஆகி விட்டன.
நாகையில் சுனாமி தாக்கியதால் உருக்குலைந்த மீன்பிடி படகுகள்.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுனாமிக்கு பலியானார்கள். காவிரி டெல்டாவின் கடைகோடி மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர்.
பல இடங்களில் குப்பைகள் போல் உடல்கள் குவிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் சேகரித்து ஒன்றாக ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டதை அழுவதற்கு கூட தெம்பு இன்றி பார்த்த உறவுகளின் சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
கடலூரில் சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்ட சில்வர் கடற்கரை இன்றும் தன் சோக கீதத்தை, காற்றோடு காற்றாக வீசி வருகிறது.
மீனவர்களை வாழ வைக்கும் கடல், அன்று ஒரே நாளில் அவர்களது உயிரையும் குடித்தது. சுனாமி பேரலையில் உயிர் தப்பிய பலரும் தங்களது குடும்பத்தை இழந்து நிர்கதியாகி நின்றனர்.
இயற்கையின் பெருங்கருணையாக வழிபடப்படும் கடல் அன்னை அன்று ஒருநாள் சற்று இரக்க முகம் காட்டி இருக்கலாம்! வழக்கம்போல குழந்தைகளின் கால் நகங்களுக்கு கிச்சுமுச்சு காட்டி இருக்கலாம்!
என்ன செய்வது. எல்லாம் இயற்கையின் விளையாட்டு.
காலங்கள் போனாலும், மாற்றங்கள் வந்தாலும் மறக்க முடியுமா? சுனாமி ஏற்படுத்திய இழப்பை.