2025-26 ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்
- தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.
மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.