தமிழ்நாடு

வைகை, பல்லவன் ரெயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்

Published On 2025-03-14 07:39 IST   |   Update On 2025-03-14 07:39:00 IST
  • பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.

மதுரை:

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்தும், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்தும் சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்கள் என்பதால், இரு மார்க்கங்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பயணம் செய்கின்றனர்.

இதனால், முன்பதிவு பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.

எனவே, பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12636/12635) மற்றும் காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12606/12605) ஆகிய ரெயில்களில் ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன்பின், இந்த ரெயில்களில் 3 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.

Tags:    

Similar News