தமிழ்நாடு

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி.. தமிழிசை சவுந்தரராஜன் கைது

Published On 2025-03-06 11:39 IST   |   Update On 2025-03-06 11:39:00 IST
  • தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
  • தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற இருந்தது.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தை மேலும் பூதாகாரமாக மாற்றியுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

பா.ஜ.க. உள்பட சில கட்சிகள் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கைவெுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வந்தார்.

எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய காவல் துறையினர் கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். எனினும், கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற அவரை காவல் துறையினர் கைது செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், கையெழுத்து இயக்கம் நிச்சயம் நடைபெறும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதையடுத்து, காவல் துறையினர் தமிழிசை சவுந்தரராஜனை சுற்றி நின்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் இருதரப்பும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே காவல் துறையினரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி செய்தது மற்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News