முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் உள்பட முக்கிய பிரபலங்கள் த.வெ.க.-வில் இணையும் விழா - ஏற்பாடுகள் தீவிரம்
- விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
- இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ள நிலையில் நடிகர் விஜய் தனித்து போட்டியிட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ள அவர் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
பூத் கமிட்டிகளை வலுவாக்கி அதன் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலுமே கட்சியின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கு விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல பெண் பிரமுகரும் தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோன்று அ.தி.மு.க. வில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் த.வெ.க.வில் சேருவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விரைவில் விஜய் கட்சியில் சேருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இது போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவில் பணிபுரிந்து வருபவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இப்படி மாநிலம் முழுவதிலுமே இருந்து பல்லாயிரக்கணக்கானோர் விஜய் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருவதால் அதனை பிரம்மாண்டமான விழாவாக நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுவான ஒரு இடத்தில் வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் இணைப்பு விழாவை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான தேதி மற்றும் விழா நடைபெறும் இடங்கள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதன்மூலம் சட்டமன்ற தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.