8.21 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்
- தேர்வை கண்காணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றவுள்ளனர்.
- முறைகேடுகளை தடுக்க 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
இந்த தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது. பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்வர்கள் மற்றும் பொது மக்கள் தேர்வு கட்டுப்பாட்டு அறையை (9498383075, 9498383076) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.