தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2025-03-02 20:48 IST   |   Update On 2025-03-02 20:48:00 IST
  • பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
  • வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மூன்றாம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிலைப்புக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.

பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்த தொழிலாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.

தனியார் நிறுவனங்கள் அத்தகைய கடமையை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசே, இத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது சிறிதும் நியாயமற்றது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 153-ஆம் வாக்குறுதியாக, "அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்துவிட்டது.

மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இவர்களுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1998-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கி போராடியது. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், பா.ம.க. மற்றும் தொழிலாளர்கள் அமைப்புடன் பேச்சு நடத்திய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தது.

அன்று தந்தை கலைஞர் காட்டிய மனிதநேயத்தையும், தொழிலாளர்கள் மீதான அக்கறையையும் இன்று தனயன் மு.க.ஸ்டாலின் காட்ட மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்ப விரும்பும் வினா.

திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்? குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News