தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்- கார்த்தி சிதம்பரம் எம்.பி

Published On 2025-03-02 15:51 IST   |   Update On 2025-03-02 15:51:00 IST
  • இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
  • தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழும் ஆங்கிலமும் பயின்றாலே நமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நானும் அத்தகைய பள்ளியில் தான் படித்தேன். எனது மகளும் தமிழும், ஆங்கிலம் மட்டும் தான் பள்ளியில் படித்தார்.

மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது மறைமுகமாக இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.

வடநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைக்கு வரும்போது யாரும் ஆத்திச்சூடியோ, திருக்குறளோ, தமிழ் இலக்கியமோ, இலக்கணமோ படித்துவிட்டு இங்கு வருவதில்லை.

தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

நாமும் அவர்களுக்கு மொழி தெரியாததால் அவர்களை விரட்டி அடிப்பது கிடையாது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பழகிக்கொள்வார்கள்.

யாருக்காவது இந்தி பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரியா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இருக்கிறது. அங்கு படித்துக் கொள்ளலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியை கட்டாயம் ஆக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அவர்கள் இந்தியைதான் திணிக்க முயல்கிறார்கள்.

இது என்னவாகும் என்றால், எல்லாம் அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழிக்கான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாஜக அரசு பீகார், உபியில் இருந்து ஆசிரியர்களை அனுப்புகிறோம் என்பார்கள்.

ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News