தமிழ்நாடு

அ.தி.மு.க. கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று விவாதம்

Published On 2025-03-17 07:40 IST   |   Update On 2025-03-17 07:40:00 IST
  • கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்' எடுக்கப்படும்.
  • சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது.

சென்னை:

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைப்பார். பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெறும்.

கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான 'ஜீரோ அவர்' எடுக்கப்படும். அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நேரத்தை குறிக்கும்படி அவர் கோரலாம். தீர்மானத்தை உடனே எடுக்கும்பட்சத்தில், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவார்.

பின்னர் துணை சபாநாயகர் அல்லது அவையை நடத்துவோர் பெயர் பட்டியலில் உள்ளவர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்துவார்.

பின்னர் அந்த தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசுவார். அவரது விவாதத்திற்கு முதலமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதில் அளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், 'ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க' என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார்.

தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார்.

சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

ஒருவேளை எண்ணிக் கணிக்கும் 'டிவிஷன்' முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது.

அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதிருந்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக இந்த தீர்மானத்தை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட்டதால், அரசியல் நோக்கத்தில் தி.மு.க. அதை சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டது. எந்த இடத்திலும் அரசியலில் எதிர்வினைகள் உண்டு என்பதற்கு, சட்டசபையில் இன்று கொண்டுவரப்படும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானமும், ஒரு சாட்சியாக அமையும்.

Tags:    

Similar News