தேர்தலில் போட்டியிடாத நடிகரை அடுத்த முதல்வர் என்கிறார்கள் - விஜயை சீண்டிய திருமாவளவன்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
- கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"
என்று கூறினார்.