டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்... அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் பலர் கைது
- போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்கள் பலர் கைது
- போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது.
அதற்கு போலீசார் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் இப்போதைக்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. சில நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று போலீசார் கூறி அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து போலீஸ் தடையை மீறி சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று தமிழக பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.வினர் இன்று முயன்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இன்று காலையிலேயே பா.ஜ.க. தொண்டர்கள் ராஜரத்தினம் மைதானத்துக்கு வர முயன்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்த வர முடியாதபடி போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேபோல் தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ஜ.க.வினர் வராமல் தடுப்பதற்காக அங்கு வரும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகில் இன்று காலையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல் ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் பின்னி சாலை சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
எழும்பூர் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வரும் சாலை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் வழியாக ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் சாலை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தடையை மீறி போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை 9.45 மணி வரை பா.ஜ.க. தொண்டர்கள் யாரையும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வர போலீசார் அனுமதிக்கவில்லை. வரும் வழியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் காலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதேபோல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் தடுத்தி நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ஒன்று கூடி போராட்டம் நடத்த புறப்பட்ட பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சாலிகிராமத்திலும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அவர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வராமல் தடுப்பதற்காக அவரது வீட்டு முன்பு 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழக பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் வீடுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடு சென்னை பனையூரில் உள்ளது. அவர் போராட்டம் நடத்த வெளியே வராமல் தடுப்பதற்காக இன்று அதிகாலையிலேயே அவரது வீட்டு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவரது வீடு அருகே வந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தினார்கள். இன்று காலை 11.00 மணியளவில் அண்ணாமலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
பா.ஜ.க. அறிவித்தது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட ஆயத்தமான அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து ராஜரத்னம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு சூழல் உருவானது.