தமிழ்நாடு

அடுத்த ஆர்ப்பாட்டம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் - அண்ணாமலை ஆவேசம்

Published On 2025-03-17 13:54 IST   |   Update On 2025-03-17 13:54:00 IST
  • மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அண்ணாமலை, "ஒருவருடைய மடியில் கனமிருந்தால் மட்டும்தான் வழியில் பயம் இருக்கும். இன்றைக்கு தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது. அதனால் பயத்தில் இருக்கிறார்கள்.

ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யும் போது குரல் வளையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல் துறைக்கு இதுதான் வேலையா? தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தடுத்து நிறுத்துகிறார்கள்.

இன்றைக்கு தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22-ந்தேதி நடக்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம்.

எங்களை பொருத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேதி சொல்ல மாட்டேன். இந்த முறை காவல் துறைக்கு மரியாதை கொடுத்து தேதியை சொல்லி இருந்தோம். அவர்கள் இதுபோல் செய்வதால், ஒரு அரசியல் கட்சியாக நாங்களும் வேறு ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.

நான் பேசினால் பல விஷயங்கள் வெளிவரும் என்பதால் என்னை பேச விடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு போக விடாமல் செய்கிறார்கள். காவல் துறை என்ன வேண்டுமானாலும் முயற்சி எடுக்கட்டும்.

எங்களை பொறுத்தவரை டாஸ்மாக் ஊழலில் யார் குற்றவாளிகள் என்று நாங்கள் கருதுகிறோமோ எல்லோரையும் ஜனநாயக முறையில் முற்றுகையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தி இதை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம் அச்சாணியாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எனது அனுமானம். நான் பொறுப்பான பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை சொல்லி இருப்பது போல ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கும் என்று கூறுகிறேன். பா.ஜ.க. மீதுள்ள பயத்தால் போராட்டம் தடுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News