null
ராஜேந்திர பாலாஜி வழக்கு: ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா?- உச்சநீதிமன்றம் கேள்வி
- முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
- தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.
ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.
அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.