நீர் நிலைகளை பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றுக! - அன்புமணி
- கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும்.
- சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் நாளை (மார்ச் 22) ஒட்டி வருகிற 29-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அவற்றில் முதலாவதாக உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்" என்பது அளிக்கப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் நாள் கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக்கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு போன்றே மற்றுமொரு அதிகாரமிக்க அமைப்பு கிராம ஊராட்சி அரசு ஆகும். சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டின் நீர் வளங்களை காப்பாற்றும் நோக்கில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து நீர்நிலைகளைக் காப்போம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமாக அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.